
என் தாய் ,
என் தாய்த் திருநாட்டை
நான் அறியா நேரம்- என்னை
அறிமுகப் படுத்திய அந்த நாள்!
மூக்கொழுக
கால் சட்டை அவிழ
தூக்குச் சட்டி தரை தட்ட
அங்கே செல்ல அடம் பிடித்து
அப்பாவிடம் அடி வாங்கி
"அ,ஆ.." கற்ற அந்த நாள்..


அதிகம் தெரியா (நான்கு) வயதிலே
அருமைத் தந்தைக்குக் கடிதம் எழுதிய
அந்தஅன்பான நாள்!

அதிகம் அறியா (ஒன்பது) வயதிலே
எம்பள்ளி முதல்வராகிய(CM)
அந்த ஆனந்தமான நாள்!

வேப்ப மரத்து நிழலினிலே
கூரையில்லா வீடு கட்டி
சுவரில்லா அறையினிலே
செங்கற்கள் அடுப்பு வைத்து
மெழுகுவர்த்தி அடுப்பெரித்து
செம்மண் சோறு ஆக்கி
குளத்து நீர் குழம்பு வைத்து
பூவரசம் பூ பொறித்து
புளியம்பூ அவியல் ஆக்கி
அரச மர இலையினிலே
உற்றாருக்கு உணவிட்ட அந்த நாள் !

வேப்பிலைத் தோரணம் கட்டி
சணல் கயிறு இணைப்பெடுத்து
கொட்டாங்குச்சி ஒலிப்பெருக்கி
காகிதப் பூ தொடுத்து
நார் என்னும் தாலி கட்டி
அவளைக் கைப்பிடித்த அந்த நாள் !

கரிக்கட்டை எழுத்தாக்கி
துண்டுக் காகிதச் சீட்டு கொடுத்து
வரிசை பிடித்த நோயாளிகளை
வேப்பம்பால் மருந்தேற்றி
வேளா முள் ஊசி குத்தி
எனதருமை மக்களுக்கு
நோய் நொடி பறக்கச் செய்த அந்த நாள்!
பாவைகளின் பார்வையிலே
பள்ளிக்கூட நாட்களிலே
(எண்) பத்திலும், பதிநேழிலும்
பயணித்த
அந்த கலகலப்பான நாட்கள்!
வழக்கமான நிலையிலிருந்து
ஓர் நிலை கீழிறங்கி
தாய் முன் காட்டத் தயக்கப் பட்டு
என் கையை தாய் கையாக்கி
மதிப்பெண் அட்டையிலே
கையெழுத்திட்ட
அந்த தைரியமான நாள் !
ஆசிரியரிடம்
மட்டையடி, குச்சியடி, கொட்டு, கிள்ளு-வாங்கியும்
கம்பாக, கல்லாக நின்ற
அந்த தில்லான நாள்!


பம்பரம்
கிட்டிப் புல்லு
கோலி
கல்லாங்காய்

கண்ணாமூச்சி
பல்லாங்குழி
தாயக்கட்டை
செவன் சாட்

கரண்ட் பாக்ஸ்
நூத்தாங் குச்சி
அணிலா ஆமையா
கல்லா மண்ணா
விளையாடிய அற்புதமான நாட்கள்!

டயர் வண்டி
மாட்டு வண்டி
கூட்டு வண்டி
தட்டு வண்டி
நுங்கு வண்டி
ஒட்டிய பரபரப்பான நாட்கள்!
காதல் வயப்பட்ட அந்த நாள் !

என்னை நெகிழ வைத்து!
என்னை மகிழ வைத்து!
என்னைக் கலங்க வைத்த
ஒவ்வொரு நாளையும்..
ஒவ்வொரு பொழுதையும்..
மறக்கத்தான் முடியுமா!
No comments:
Post a Comment