5.11.2012

வழக்கு எண் :18/9 திரைப்பதிவு

எங்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை எனது அனுபவத்தை.. காரணம், நமது வாழ்வின் ஆரம்பமும் முடிவும் எப்படி நம்மால் ஆராய, அறிய முடியாதோ அது போன்றதொரு அரிய ஆராத்திரவியம்  இந்த வாழ்வியல் சார்ந்த படைப்பு. வாழ்வியல் எதார்த்தங்களை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப் பட்ட வெகு சில காவியங்களில் இதுவும் ஒன்று. பொழுது போக்கு சார்ந்த திரைப்படங்களை  மட்டுமே விரும்பும் ஒரு சிலரைக் கூட "அட" போட வைத்திருக்கக் கூடும். காரணம் நாம் கடந்து வந்த வாழ்க்கையில் நமக்குத் தென்பட்ட, நம்மால் புறக்கணிக்கப் பட்ட, கிரகித்துக் கொள்ள முடியாத பல விடயங்களை பாடமாக சொல்லாமல் சொல்லிச் சென்று விட்டனர் கதையின் நாயகர்கள்.

வலி, இன்பம், பொறுப்பு,சுயநலம், காதல், சூழ்ச்சி, உண்மை, பொய், அழிவு, இன்றைய இளைஞ/ இளைஞிகளின் விருப்பம், அதே இளைஞ/ இளைஞிகளின் துன்பம் தோய்ந்த வாழ்க்கை, அரசியல் என்று அத்தனை வாழ்வியல் நிகழ்வுகளையும் எந்த ஒளிவு மறைவு மற்றும்  நெருடலும் இன்றி நம்மை (என்னை), நம் இதயங்களை கனக்க வைத்திருக்கும்  ஒரு நிகழ்வு

இந்த நிகழ்வுகளை ஆழ்ந்து பார்த்தால், நாம் நம் சமூகம் கடந்து செல்கின்ற ஆனால் (உணர முடிந்தும் ) உணர விருப்பம் இல்லாத  மற்றும் புறக்கணிக்கப்படுகின்ற நிகழ்வுகளின் கோர்வை என்பது புரியும்.
மனித வாழ்வின் ஆதாரமே விவசாயம் தான், அதன் இன்றைய நிலை தான் என்ன?. ஏழ்மையின் கொடுமையால் இளமையிலேயே பல பொறுப்புகளுக்கும், சித்தரவதைகளுக்கும் உள்ளாகின்ற பிஞ்சுகளின் வலி தான் என்ன? சாலையோரத்தையே தன் உலகமாகக் கொண்டு வாழும் பல மனிதர்களின் வலி தான் என்ன? கிராமியக் கலையை மட்டுமே நம்பி வாழ்கின்ற நம் உறவுகளின் உண்மை நிலை என்ன ? பெண்ணாகப் பிறந்தவள் கடந்து செல்கின்ற, செல்ல வேண்டிய கரடு முரடான பாதை எப்படிப்பட்டது? பிள்ளைகள் பெற்ற பெற்றோர்கள் படும் துன்பங்கள் தான் என்ன? பணம்  வாய்த்த, வாய்க்கப் பெறாதவர்களுக்கான உலக நீதி எப்படிப்பட்டது? அக அழகா, முக அழகா
 
இப்படி நாம் நம் மனதால் உணர முடிகின்ற ஆனால் உணர விருப்பம் இல்லாத, விருப்பம் காட்டாத வாழ்வை, பாசம் மற்றும் காதல் என்கிற அழகியலோடு  மனித மனங்களில் அளவளாவி, ஊடுருவிச் செல்கின்றது இந்த இனிய கவிதை.

இந்தக் கவிதையின் நாயகர்கள் அனைவருமே கவிதைக்கான கவி நயத்தை எந்த குறையும் இல்லாமல் தந்திருக்கிறார்கள். சாலையோரக் கடையில் பணிபுரியும் வேலுவின் உடல் அசைவுகளில் இருந்து அவனது குரல் வரை நம்மை கவர்கிறது, அத்துனை தேர்ந்த நடிப்பு மற்றும் கதாப்பாத்திரம். அவன் வாழப்போகும் நகருக்குள் பசி கொண்டு, நிலை தடுமாறி தன்னை மறந்தவனாகக் கிடக்கும் போது நமது சமூகம் எப்படி கண்டும் காணாமல் செல்கிறது என்பதற்கு அற்புதமான திரை வெளிப்பாடு. அவன் விரும்பும் அவள் முகம் சிதைந்து, மருத்துவமனையில் இருப்பது  தெரியும் போதும், அவளின் அழிந்த முகத்தை அவன் பார்க்கும் போதும் அவன் விடும் கண்ணீர் நம்மை கண்ணீர் விட வைக்கிறது. விலை மாதுவா(க்)கப் பட்டவளுக்கும் எப்படிப்பட்ட  மனம் உண்டு என்பதற்கு ரோசியின் பாத்திர வெளிப்பாடு ஒரு அனுபவம் (இதுவே தான் திருநங்கைகளுக்கும் பொருந்தும். நாம் நம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விலை மாதுக்களையும், திருநங்கைகளையும், இன்ன பிறரையும்  ஒதுக்கி வைத்திருப்பதாக நடிக்கிறோம் என்பது எனது தனிப்பட்ட கருத்து

"சோதி" இவள் தான் அந்த அவனின் அவள். அவளின் பார்வை, நடை, உடை அனைத்துமே ஏழ்மையில் வாடும் ஒரு பெண்ணிற்கான வெளிப்பாடு. "ஒரு குரல் கேக்குது பெண்ணே" பாடலில் அவன் கண்ட கனவு எனக்கும் வாய்க்காதா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு மனதில் நிற்கிறதுஇந்தச் சோதியின் தாய் திரையில் வரும் ஒவ்வொரு கனமும், பெண்ணாக பிறந்தவளுக்கான வலி தெரியும்.

"சின்னச்சாமி" கூத்துக்கலைஞன். இது தான் கூத்துக் கலைஞர்களின் இன்றைய நிலை. கூத்துக் கலைஞர்கள் மட்டும் அல்ல, பாரம்பரிய தமிழ் கலைஞர்களின் நிலையும் கூட. திரை மீதான தனது தனிப்பட்ட விருப்பத்தையும், கோடம்பாக்க கனவில் கிளம்பும் எத்தனையோ உள்ளங்களின் வேட்கையையும் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றான். வேலுவிடம் அவன் பேசும் போது, பொய் சொல்லத் தெரியாதவர்களை இந்த உலகம் நம்பாது என்று நம்மை நம்ப வைத்தும் விடுகிறான். சின்னச்சாமி  வந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியும், வலியும் மாறி மாறி  ஒன்று சேர்ந்து கொள்கிறது

இன்றைய சில  இளைஞர்களின் (தவறான) விருப்பம் என்னவாக இருக்கிறது என்பதை, பணக்காரப் பையனாக வந்து ஒரு அழகுப் பதுமையை தவறான காரணத்திற்காக கவர எண்ணி, அவளின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து வைத்திருக்கும் "Item"  என்கிற  பெயரிலேயே சொல்லி விடுகிறான். இது ஆண் மற்றும் பெண் பிள்ளைகளை பெற்ற தற்கால தாய் தந்தையருக்கான எச்சரிக்கை ஒலி.

பணம் பெற்றவர்களுக்கும் அது வாய்க்கப் பெறாதவர்களுக்குமான நீதி என்ன என்பதை காவல் அதிகாரி, பணக்காரப் பெண்மணி, முகம் மறைக்கப்பட்ட  அரசியல்வாதி கதாப்பத்திரங்களின் வாயிலாக நம் மனதை சுட வைக்கிறார்கள்

அதிலும் வேலுவின் அவளை... அவன் முதன் முதலாக காணும் .. ஆனால் கதையின்  இறுதியாக காட்டும் கனம் நம் மனம் அழவும் செய்கிறது. அவளின் முகம் போன்றது தான் என் போன்ற மனிதர்களின் வாழ்க்கை.கரடு முரடானது..மற்றவர்கள் விரும்பாதது..ஆனால் எங்களால் மட்டுமே  வாழ முடிந்தது.

மேற்கூறிய அனைத்தையும் நமக்கு ஒரு பாடமாக அல்லாமால் திரையில்  அனுபவமாகவே தந்திருக்கிறார்கள்  கதை நாயகர்கள்.

ஒரு அடைசலான தெருவைத் தாண்டி முடிப்பதற்குள் நமது வாழ்க்கை ஆரம்பித்து, பயணித்து, முடிந்து போனது போன்ற உணர்வு. இப்படிப் பட்ட வாழ்க்கை யாருக்கும் அமைய கூடாது என்று நமக்கு எண்ணத் தோன்றும்.. ஆனால் அதுவல்ல உண்மை. இது இயற்கையின் நியதி. இப்படிப்பட்ட மனித மனங்களின் வாழ்வை அழகாக்குவது நம் சமூகத்தின் பொறுப்பு.!

                                                                                                                       -முகி